"அக"விதைகள்

Friday, June 04, 2004

அடம்!

"அம்மா... 'ஜெய்ப்பூர்' செயற்கைக்கால் வாங்கித் தந்தால் தான், பள்ளிக்குப் போவேன்"! ஒற்றைக் காலில்... அடம்பிடிக்கும், பள்ளிச்சிறுவன்!! ஈழநாதன் http://www.tamiloosai.com/ 31.05.04

Thursday, June 03, 2004

ஈன்ற பொழுதில்.....

மகனே...! அன்றொருநாள் எனக்கு, உனையீன்ற பொழுதிலும் பெரிதும் வலித்தது! ஊரு விட்டு ஊரு வந்து, தங்கியிருந்த ஓர் நாளில், என் கண்முன்னே உன்னுடலம், கண்டும் காணாமலும் நான்.! சந்தை செல்லும் வழியில் சுட்டுப் போட்டிருந்தார்கள். உடம்பெங்கும் துளைபட, திறந்த விழி வெறிக்க, பெற்றவென் வயிறு வலிக்க, இரவுச் சுற்றிவளைப்போடு அதுவாகிப்போன! நீ கிடந்தாய். உன்னுடலில் மொய்த்திருந்த இலையான்களிலும் பார்க்க உன்னை மொய்த்திருந்த இராணுவம் அதிகம்!! "யார் பெத்த பிள்ளையோ" இரக்கப்படவெனவே பிறந்திருக்கும் சிலர் உச்சுக் கொட்டினார்கள். எனக்குத் தெரியும்! உனக்கும் தெரியும்!! நீ... நான் பெத்த பிள்ளை. ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து, நான் சுமந்து பெத்த பிள்ளை! கர்ணன் பெத்த குந்தி போல குந்தியிருந்து, குமுறியழ எனக்கும் ஆசைதான். உனக்காக அழும் அழுகை உன்னோடை தங்கச்சிக்கு எமனாக மாறிவிடும்! நீ என் மகனென்று தெரியவரும் இப்பொழுதில், என் வீடு... சுத்திவளைக்கப்படும். கட்டிய துணியுடன், இராணுவமுகாமுக்கு இழுபடுவாள் உன் தங்கை! வாய் வரைக்கும் வந்துவிட்ட ஒப்பார,¢ தொண்டைக்குழியோடு காணமற் போனது. ஐயோ என் மகனே..! பெற்ற மகனையே, பேரு சொல்லி அழமுடியாப் பாவியாப் போனேனே!. உன்னை ஈன்ற பொழுதிலும்.... பெரிதும் வலிக்கிறதே! ஈழநாதன் நன்றி திண்ணை

Tuesday, June 01, 2004

எல்லாம் மறந்துவிட்டோம்!!

அகதியாய் தெருவெங்கும் ஓடி ஒளிந்ததுவும், அநாதரவாய் வீதிகளில் அலைந்து திரிந்ததுவும், குண்டு வீச்சுக்காய் குழிகளில் பதுங்கியதும், அண்டை அயலெல்லாம் அவலமாய்ச் செத்ததுவும்! கூடப்படித்தவர்கள் காணாமற் போனதுவும், கூடித் திரிந்தவர்கள் காட்டுக்கு ஓடியதும்! வீதித்தடைகளில் இறங்கி நடந்ததுவும், சென்றிக்கு சென்றி சலாம் போட்டதுவும்!. ஊரடங்கு, காவலரண், செம்மணி, சுடுகாடு, பண்டுக்கு உள்ளே, பண்டுக்கு வெளியே.! பாணுக்கு கியூ, சீனிக்கு கியூ, பால்மாவுக்கு தட்டுப்பாடு, பனடோலுக்குக் காத்திருப்பு. கொழும்பு போக பாஸ், திரும்பி வர பாஸ், வடமராச்சிக்கு ஒரு பாஸ், வலிகாமம் இன்னோர் பாஸ். எல்லாம் மறந்துவிட்டோம்! எதுவுமே நினைவில்லை!!. போர் ஓய்ந்து போனதோடு, ஓரிழவும் நினைவில்லை!. பணம், பகட்டு மட்டுமல்ல "பஜாஜ் பல்ஸர்" கூட கண்களை மறைத்துக் களியாட்டம் போடுதோ? நாளொரு கொள்ளை, பொழுதொரு கற்பழிப்பு! நாலு பேர் கூடினால், நாளுக்கு ஒரு சண்டை! "ஹையேஸ்" கடத்தல்கள், காசுக்கு வெருட்டல்கள். வாளெடுத்துச் சண்டைகள், தாளுடைத்துத் திருட்டுக்கள். இதுதானா நாம் பார்க்கும் இன்றைய யாழ்ப்பாணம்? இந்தச் சீரழிவுக்கா? இத்தனை உயிரிழப்பு!! ஈழநாதன் 01/06/2004 www.sooriyan.com